தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்து மாநில சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க. பெரும் பின்னடைவை சந்திக்கும் என கணிப்புகள் வெளியாகும் நிலையில், "தமிழகத்தின் மீதான பா.ஜ.க.வின் கவனம் மிகவும் அதிகமாகிவிட்டது' என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள்.
பா.ஜ.க.வின் தமிழக அசைன்மெண்ட்படி ஓ.பி.எஸ்.சை தர்மயுத்தம் செய்ய வைத்தது, ரஜினியுடன் பா.ஜ.க.விற்காக பேசியது எல்லாம் ஆடிட்டர் குருமூர்த்திதான். ""ஓ.பி.எஸ். பின்னாடி நிறைய எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ரஜினி உடனடியாக கட்சி ஆரம்பிப்பார். அவர் பா.ஜ.க.வை வெளிப்படையாக ஆதரிப்பார்'' என குருமூர்த்தி சொன்னதை ஆரம்பத்தில் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் நம்பினார்கள். இரண்டுமே நடக்காததால் அவருக்குப் பதில் தொழிலதிபர்கள் டீம் பா.ஜ.க.வுக்காக தமிழகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த டீம் அரசியல்வாதிகளிடம் பேச்சுவார்த்தை களை நடத்தி வருகிறது.
""முதல்கட்டமாக பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸிடம் பா.ஜ.க. டீம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. அன்புமணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. வழக்கு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. அன்புமணி தரப்பு, "பா.ஜ.க. கூட்டணிக்கு ஓ.கே. ஆனால் பா.ம.க.வுக்கு வட மாவட்டங்களில் உள்ள ஏழு பாராளுமன்றத் தொகுதிகள் வேண்டும். அந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளும் கவனிக்கப்பட வேண்டும்' என பா.ம.க. தரப்பு வைத்த கோரிக்கைதான் பா.ஜ.க.விற்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எப்பாடுபட்டாவது தமிழகத்தில் குறைந்தபட்சம் 10 பாராளுமன்றத் தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் முனைப்பு தொடர்ந்து அவர்களை பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்துள்ளது'' என்கிறார்கள் டீமில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வினர்.
""பா.ம.க.வைவிட மிகக்கடினமான பேச்சுவார்த்தைகள் அ.தி.மு.க. அணிகளை இணைப்பதில் நடந்து வருகின்றன. சமீபத்தில் பெங்களூரு சிறையில் தன்னை சந்தித்த அ.ம.மு.க.வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க.வுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை விவரங்களைப் பற்றி சூசகமாக தெரிவித்துள்ளார் சசிகலா. சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடக்காமலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்பு மூலமாக அவர்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்கு டீல் நடந்து வருகிறது. அதற்காக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் எடப்பாடியுடன் நடந்துள்ளதாம்.
தினகரனின் மனைவி அனுராதாதான் அ.ம.மு.க.வை இயக்குவதாகவும், பரோலில் வந்த இளவரசியை பதினைந்து நாட்களில் ஒருமுறை கூட டி.டி.வி. தினகரன் சென்று பார்க்கவில்லை என்றும் அதற்குக் காரணம், அனுராதாவிற்கும் இளவரசிக்கும் இடையே ஜெயா டி.வி.யை நடத்துவது தொடர்பாக கூறப்பட்ட சண்டைதான் என்றும் குடும்ப வட்டாரத்துக்குள் கிசுகிசுப்புகள். இதனால் தினகரனுடன் விவேக் பேசுவதில்லை. தங்க.தமிழ்ச் செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோரோடு மட்டும் பேசிவிட்டு தகவல்களை சசிகலாவுக்கு தெரிவிக்கிறார்'' என நடப்பவற்றைச் சொன்ன எம்.எல்.ஏ.க் களிடம் "இதெல்லாம் எனக்குத் தெரியும். உங்கள் அனைவரைப் பற்றியும் புகார் கடிதங்கள் சிறைக்கு வருகிறது. நான் அனைத்தையும் படிக்கிறேன். எனக்கு விவேக், இளவரசி, அனுராதா இவர்களெல்லாம் யார் என தெரியும். எடப்பாடியையும் தெரியும்' என பதில் சொல்லியிருக்கிறார் சசிகலா.
"உங்களுக்கு தினகரன் பற்றி என்ன தெரியும். நீங்கள் இளவரசியை தினகரன் பார்க்கவில்லை என சொல்கிறீர்கள். இளவரசி பெங்களூருக்கு புறப்பட்டு வருவதற்கு முன்பு இளவரசியை தினகரன் சந்தித்து ஒருநாள் முழுக்க பேசிவிட்டுத் தான் வந்திருக்கிறார். யாரும் எனது கட்டுப்பாட்டை மீறி செயல்பட மாட்டார்கள். நான் எல்லா பிரச்சினைகளையும் முடித்து வைக்கிறேன்' என நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார் சசிகலா'' என்கிறது பெங்களூரு சிறை வட்டாரம்.
""இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனை சிறைக்கு அனுப்புவோம் என பா.ஜ.க. கொடுத்த எச்சரிக்கை, தினகரன் நிலையில் லேசான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்கிறார்கள், பா.ஜ.க. சார்பில் பேசும் குழுவைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில், எடப்பாடி தனது பிடியை விட்டுக் கொடுக்கவில்லை. "சசிகலா வேண்டுமானால் கட்சியின் பொதுச்செயலாளராக வரட்டும். நான்தான் முதல்வர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மட்டுமல்ல அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் நான்தான் முதல்வர். தேர்தல் செலவுகளைப் பற்றி சசிகலா கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்பதுதான் எடப்பாடியின் நிலை.
எடப்பாடி முதல்வர் என்பதை பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டாலும் சசிகலாவிடம் கட்சி போவதை ஓ.பி.எஸ். ஏற்கவில்லை. "சசிகலா வரட்டும், தினகரன் வேண்டாம்' என்பதுதான் ஓ.பி.எஸ்., தங்க மணி, வேலுமணி ஆகியோரது நிலை'' என்கிறார் கள் பேச்சுவார்த்தை நடத்தும் பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள். ""எடப்பாடியே கடைசிக்காலம் வரை முதல்வர் என்பதை மற்ற தரப்பு ஏற்றுக்கொண்டால் அடுத்த நிமிடமே மூன்று அணியும் இணையும். 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கத்தை சபாநாயகர் ரத்து செய்துவிடுவார்'' என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
""அ.தி.மு.க. அணியை ஒருங்கிணைக்கும் அதே வேளையில் தி.மு.க. அணியை பலவீனப்படுத்தும் வேலைகளைக் கவனிப்பதற்காகவே ஒரு சிறப்பு குழுவை போட்டு பா.ஜ.க. வேலை செய்கிறது'' என் கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்